செய்திகள்

காஷ்மீர்: பாரமுல்லா மாவட்டத்தில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Published On 2017-09-04 06:08 GMT   |   Update On 2017-09-04 06:08 GMT
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் வடக்கில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட சோபோர் நகரப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷங்கர்கன்ட் பிரத் கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் குப்வாராவுக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.

அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். கைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது.


தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வன்முறை பரவாதவாறு பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News