செய்திகள்

அரசு மருத்துவமனையில் வார்டு பாய் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நோயாளிகள் பாதிப்பு

Published On 2017-07-22 12:54 GMT   |   Update On 2017-07-22 12:54 GMT
அரசு மருத்துவமனையில் வார்டு பாய் ஒருவர் தனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டம் தண்டாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள வார்டு பாயின் மகனுக்கு நேற்று
பிறந்தநாள்.

தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட நினைத்தார். ஆனால், மண்டபம் பார்த்து பிறந்தநாள் கொண்டாட வசதி இடம் கொடுக்கவில்லை. எனவே, தான் வேலை செய்யும் அரசு மருத்துவமனையிலேயே மகனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார்.

இதையடுத்து, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

மகனின் பிறந்தநாளுக்காக மருத்துவமனை வார்டின் ஒரு பகுதியை சுத்தமாக்கி அலங்காரம் செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் வண்ண பலூன்கள் கட்டினர். கேட்டரிங் நிறுவனத்தினர் ஆவி பறக்க உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். கேக் வெட்டி முடித்ததும் அனைவரும் தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து சாப்பிடுகின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பலர், சிறிது நேரம் காத்திருந்து யாரும் வந்து எதுவும் கேட்காததால் வீட்டை நோக்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வார்டு பாயாக வேலை பார்ப்பவர், அரசு மருத்துவமனையில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடலாமா என்றும், அவரது செயலுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News