செய்திகள்

ஏழைகள், விவசாயிகள், தலித்துக்களைப் பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை: ராகுல் காந்தி காட்டம்

Published On 2017-07-19 11:38 GMT   |   Update On 2017-07-19 11:38 GMT
ஏழைகள், விவசாயிகள், தலித்துக்களைப் பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை என ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களவையில் இன்று விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச விரும்பினோம். பிரதமர் கூட அவையில் இருந்தார். ஆனால் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை.

மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பயிர்கடன்களை ரத்து செய்யுமாறு 2 கோடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘ஜி.எஸ்.டி.யால் பெரிய வர்த்தகர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சிறு குறு வணிகர்கள் துன்பப்படுவார்கள் என்பதால் பாஜக அரசு அவசர அவசரமாக ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்ய வேண்டாம், மூன்று நான்கு மாதங்கள் பொறுத்திருங்கள்’ என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. வருமான வரி செலுத்துவோருக்காக அரசை நடத்தவே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பெரிய வணிகர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களால் 10 கணக்காளர்களை வேலைக்கு வைத்து, பல படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும். ஆனால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலித்துக்களைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

மேக் இன் இந்தியாவைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார், விவசாயிகளை புறக்கணிக்கிறார். பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. இதைப் பார்த்து உ.பி.யில் பா.ஜ.க. அரசு விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News