செய்திகள்

மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பம்: மேலும் 2 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

Published On 2017-07-17 07:36 GMT   |   Update On 2017-07-17 07:36 GMT
மணிப்பூர் மாநிலத்தின் அரசியலில் திடீர் திருப்பமாக மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆளும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இம்பால்:

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாகலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதியிலும், தேசிய மக்கள் கட்சி 4 தொகுதியிலும், லோக்ஜன சக்தி திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற முடியவில்லை. அந்த கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தன.

இதைத்தொடர்ந்து தலைநகர் இம்பாலில் நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக (முதல்-மந்திரியாக) பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கவர்னர் மாளிகையில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி மணிப்பூர் முதல்-மந்திரியாக பிரேன்சிங் பதவி ஏற்றார்.



இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். அதில் ஸ்யாம் குமார் என்பவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஷேத்ரிமயூம் பிரேன் சிங் மற்றும் பாவ்னம் ப்ரோஜன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தனர். இதையடுத்து, ஆளும்கட்சியான பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ-க்கள் பலம் 31 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பலம் 20 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News