செய்திகள்

தாயை கொன்றவர்களை கண்டுபிடியுங்கள்: உண்டியல் பணத்தை போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த சிறுமி

Published On 2017-06-29 13:00 GMT   |   Update On 2017-06-29 13:00 GMT
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் தாயை கொன்றவர்களை கண்டுபிடிப்பதற்காக லஞ்சம் கொடுக்க தனது உண்டியல் பணத்தை எடுத்து வந்த சிறுமியை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர் மான்வி (5). இவரது பெற்றோர் சஞ்சீவ் மற்றும் சீமா தம்பதியினர்.

இவரது தாய் சீமா கடந்த ஏப்ரலில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சீமாவின் கணவர் சஞ்சீவ் குடும்பத்தினரை கைது செய்யவேண்டும் என சீமாவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் சஞ்சீவ் மீது எந்த புகாரையும் பதிவுசெய்யாமல் இழுத்தடித்து வந்தார்கள். இதைதொடர்ந்து மான்வி, தாத்தாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது தாத்தா மற்றும் உறவினருடன் மான்வி மாவட்ட டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கிருந்த ஐ.ஜி குமாரை சந்தித்து பேசினார்.

அப்போது மான்வி அவரிடம், “போலீசாரிடம் காசு கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என அனைவரும் கூறுகின்றனர். எனவே நான் எனது உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்து வந்துள்ளேன். அதை வைத்துக் கொண்டு எனது தாயை கொன்றவர்களை விரைவில் கண்டுபிடித்து தாருங்கள்’’ என கோரிக்கை வைத்தார்.

இதைதொடர்ந்து, போலீஸ் ஐ.ஜி குமார், ’விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம்’ எனக்கூறி அந்த சிறுமியை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தார்.

5 வயது சிறுமி போலீஸ் கமிஷனரிடம் சென்று, ’குற்றவாளிகளை கண்டுபிடித்து தருவதற்கு லஞ்சம் கொண்டு வந்துள்ளேன்’ என தைரியமாக கூறியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News