செய்திகள்

விவசாயிகள் கடன் தள்ளுபடி: மராட்டிய மாநில மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளம் நன்கொடை

Published On 2017-06-24 13:15 GMT   |   Update On 2017-06-24 13:15 GMT
விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடிக்காக, மராட்டிய மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குகின்றனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கவும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் விளைவாக, விவசாயிகளின் பயிர் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பட்னாவிஸ் கூறுகையில், ’இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர் கடன்கள் தள்ளுபடியாகும். விவசாயிகளின் கடன் சுமையை நாங்கள் தாங்கி கொள்கிறோம். அவர்களுக்காக எங்களது (அரசின்) செலவுகளை குறைத்துக் கொள்வோம்.

விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடிக்காக மராட்டிய மாநில மந்திரிகள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News