செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டுகிறார்

Published On 2017-06-24 06:51 GMT   |   Update On 2017-06-24 06:51 GMT
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி ஆதரவு திரட்ட உள்ளார்.

புதுடெல்லி:

புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மீராகுமார் வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான 28-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதையடுத்து இருவரும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்ட திட்ட மிட்டுள்ளனர். இதற்காக இரு வார கால அவகாசத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் வழங்கியுள்ளது.


ராம்நாத் கோவிந்துக்கு 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு 61 சதவீதம் வாக்குகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

என்றாலும் முறைப்படி மாநில கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். முதலில் அவர் தன் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி ஆதரவு திரட்ட உள்ளார். பிறகு அவர் மற்ற மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செல்லவுள்ளார்.

அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் செல்ல இருக்கிறார்கள்.

Tags:    

Similar News