செய்திகள்

70 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புக்கு பாக். அச்சுறுத்தலாக இருந்து வருகிறது: அருண் ஜெட்லி பேச்சு

Published On 2017-05-29 10:04 GMT   |   Update On 2017-05-29 10:04 GMT
இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் 70 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி பேசினார்.

பெங்களூரு:

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் பைலட்டுகள் மூலம் இயக்கப்படும் விமானங்களை சோதனை முறையில் பறக்க விடுவதற்காக விமான சோதனை தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பெங்களூருவில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் சாலக்கெரேயில் 4,290 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,300 கோடி செலவில் இந்த விமான சோதனை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சோதனை தளம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மற்றும் ராணுவ மந்திரி அருண்ஜெட்லி கலந்து கொண்டு அந்த தளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

“நமக்கு அருகே ஒரு அண்டை நாடு (பாகிஸ்தான்) உள்ளது. அது 70 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி எப்போதும் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உள்நாட்டிற்குள் இதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய வசதிகள் கொண்ட விமான சோதனை தளம் சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்படும் விமானங்கள் இந்த தளத்தில் சோதனை நடத்தப்படும்.

பெங்களூருவில் உள்ள விமான வளர்ச்சி நிறுவனம், இதர ராணுவ வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கழக ஆய்வு கூடங்களுடன் இணைந்து இந்த விமான சோதனை தளத்தை அமைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய நமக்கு அதிக செலவு ஆகிறது. அந்த தளவாடங்களை இங்கே உற்பத்தி செய்தால், நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கினால் நாம் உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் ஆதிக்கம் செலுத்த முடியும்.

உள்நாட்டிற்குள் இதுபோன்ற ராணுவ வசதிகளை உருவாக்க ஒரு கொள்கையை வகுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நமது நாட்டின் பாதுகாப்பின் பல பகுதிகளுக்கு உதவ நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.“

இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.

Tags:    

Similar News