செய்திகள்

ஆர்.கே.நகரில் புதிய தேர்தல் தேதியை அறிவிக்க தினகரன் லஞ்சம்: டெல்லி போலீஸ் பரபரப்பு புகார்

Published On 2017-05-20 09:15 GMT   |   Update On 2017-05-20 09:15 GMT
ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலை மே 5-ந்தேதி நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் புகார் கூறியுள்ளனர்.

புதுடெல்லி:

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.

வாக்காளர்களுக்கு பெரும் அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் கமி‌ஷன் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்தது. அமைதியான சூழல் உருவான பின்பு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

இந்த நிலையில் தேர்தலில் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு புகார் கூறப்பட்டது.

டெல்லியில் கைது செய்யப்பட்ட பெங்களூரை சேர்ந்த தரகர் சுகேஷ் சந்திர சேகர் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘தினகரன் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றும் இதற்காக தன்னிடம் பணம் கொடுத்தார்’’ என்றும் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சுகேஷ் சந்திர சேகரிடமிருந்து போலீசார் லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றினார்கள். இந்த வழக்கில் கைதான தினகரன், சுகேஷ் சந்திர சேகர் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் புதிய புகார் கூறியுள்ளனர்.


அதில் ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலை மே 5-ந்தேதி நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று கூறப்பட்டுள்ளது.

5-ம் எண் தனக்கு ராசியானது என்பதால் இடைத்தேர்தல் தேதியை மே 5 என நிர்ணயிக்க வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் அதிகாரியிடம் பேரம் பேசியுள்ளார் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தினகரன், சுகேஷ் சந்திர சேகர் இருவர் இடையே நடந்த டெலிபோன் உரையாடல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் டெல்லி போலீஸ் கூறியுள்ளது.

இந்த புதிய புகார் தொடர்பாக தினகரன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

எனவே தினகரன் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தாலும், அடுத்த வழக்கில் அவர் மீண்டும் கைதாகி சிறையிலேயே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தினகரன் மீது அமலாக்க பிரிவும் சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News