செய்திகள்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட என்ஜினீயர் உடல் ஐதராபாத்தில் தகனம்

Published On 2017-02-28 17:19 GMT   |   Update On 2017-02-28 17:19 GMT
அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதியில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய என்ஜினீயரின் உடல் ஐதராபாத்தில் தகனம் செய்யப்பட்டது
ஐதராபாத்:

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் கடந்த 23-ம் தேதி மதுபான விடுதி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அங்குள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்திருந்த ஸ்ரீனிவாஸ் கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.

மும்முரமான ஆட்டத்தின்போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

ஸ்ரீனிவாசின் உடல் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று பின்னிரவு ஐதராபாத் விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஐதராபாத் புறநகரில் உள்ள பச்சுப்பல்லி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர். பிற்பகலில் ஜூப்ளி ஹில்ஸ் என்ற இடத்தில் சீனிவாஸ் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகளை அவரது தந்தை மதுசூதன் ராவ் செய்தார். அப்போது கூடியிருந்த பொதுமக்கள், அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Similar News