கதம்பம்
null

கழிவுகளை அகற்றினால் ஆனந்தம்!

Published On 2024-04-17 10:45 GMT   |   Update On 2024-04-17 10:45 GMT
  • கல்லீரல் அழற்சி, கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்றவற்றைத் தடுக்கும்.
  • சோறு வடித்த நீர் அல்லது முதல்நாள் சோற்றில் ஊறிய நீராகாரத்தை 50 மி.லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம், குடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களும் நச்சுகளுமே. நாள்தோறும் மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும் வயிற்றுக் கழிவுகளை அகற்றப் போதுமானவை அல்ல, கழிவுகளை முழுமையாக வெளியேற்ற பேதி மருந்து அவசியம்' என்கிறது சித்த மருத்துவம்.

நான்கு மாதத்துக்கு ஒரு முறை பேதி எடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம்'எனக் கூறுகிறது சித்த மருத்துவம். அதனால் கால்வலி, மூட்டுவலி, அஜீரணம் போன்ற வாதநோய்கள் நீங்கும், உற்சாகம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் பல்வேறுவிதமான மருந்துகள் பேதிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கிராமங்களில் பின்பற்றிவரும் ஓர் எளிய முறை எல்லோரும் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடியதாக இருக்கிறது. அதற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்தது. இதை, `வயிற்றைச் சுத்தமாக்கும் மருந்து' என்றே சொல்லலாம். இது உடலிலுள்ள கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றி, பசியின்மையை நீக்கி, உடலை வலுவாக்கும். கடுமையான வாய்வுக் கோளாறையும், குன்மம் நோயையும் போக்கும். அத்துடன் வாதம், பித்தம் மற்றும் கபம் சமநிலைப்படுத்தப்பட்டு நோய்கள் கட்டுக்குள் வரும்.

சோறு வடித்த நீர் அல்லது முதல்நாள் சோற்றில் ஊறிய நீராகாரத்தை 50 மி.லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், அத்துடன் 30 மி.லி ஆமணக்கு எண்ணெயையும் சேர்த்து அருந்த வேண்டும். அரை மணி நேரத்துக்குள் மலம் வெளியேறும். பேதிக்கு மருந்து சாப்பிட அதிகாலை நேரம் மட்டுமே சிறந்தது. அதுவும் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். டீ, காபி சாப்பிட்டதும் எடுக்கக் கூடாது. பேதிக்கு எடுக்கும் முன்தினம் இரவு அதிக அளவிலான, கடினமான உணவுகளைத் தவிர்த்து, எளிதில் செரிமானமாகும் உணவை உண்ண வேண்டும்.

பேதிக்கு மருந்து எடுத்த நாளில் பத்தியம் இருக்க வேண்டியது அவசியம். அந்த நாளில் மோர் சாதம், பால் சாதம், இட்லி, அரிசிக் கஞ்சி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதிக காரம், மசாலா, புளி சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மலம் அடிக்கடி வெளியேறுவதால் உடலிலுள்ள உப்புகளும் தாதுக்களும் வெளியேறுவதுடன் உடல் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். எனவே, அவற்றை ஈடுகட்ட சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் 'பத்திய ரசம்' அருந்த வேண்டும். பொதுவாக புளியைக் கரைத்து மிளகு, பூண்டு சேர்த்துக் கொதிக்கவைப்பது வழக்கம். ஆனால், இந்த ரசத்தில் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மற்ற பொருள்களையும் சேர்க்க வேண்டும். கடுகு, எண்ணெய் சேர்த்துத் தாளிக்கக் கூடாது.

பேதி மருந்து சாப்பிட்டதும், இந்த ரசத்தை சிறுகச் சிறுக அருந்த வேண்டும். நான்கு, ஐந்து தடவை மலம் வெளியேறியதும் அன்று காலை 11 மணியளவில் மோர் அருந்த வேண்டும். இதையடுத்து வயிற்றுப்போக்கு நின்றுவிடும். மதியம் மோர் சாதம் சாப்பிட வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட வேண்டும்.

பேதி மருந்து சாப்பிடுவதால் வயிறு மட்டுமல்லாமல் பித்தநீர் வரும் பாதை, கணையம் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் கழிவுகள் அகற்றப்படும். செரிமான நொதிகள் தூண்டப்படும். குடல் தூய்மையாகும். சத்துகளை உட்கிரகிக்கும் தன்மை கிடைக்கும். கல்லீரல் அழற்சி, கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்றவற்றைத் தடுக்கும்.

வயது, உடல் எடை, நாடித்துடிப்பைப் பொறுத்து பேதிக்கான மருந்துகளும் அளவுகளும் மாறுபடுவதால் சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, பேதி மருந்து எடுப்பது மிகவும் சிறந்தது.

-டாக்டர் தெ.வேலாயுதம்

Tags:    

Similar News

தம்பிடி