செய்திகள்
இளங்கோவன் தங்கியுள்ள பங்களா.

ஜெயலலிதா தங்கிய வீட்டில் குடியேறிய இளங்கோவன்- அதிமுக தொண்டர்கள் அதிருப்தி

Published On 2019-03-30 05:49 GMT   |   Update On 2019-03-30 05:49 GMT
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. #Jayalalithaa #EVKSElangovan
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது அவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். சிங்கப்பூர் பங்களா என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் குடியேறி தினமும் ஆண்டிப்பட்டிக்கு பிரசாரம் செய்ய சென்றார்.

இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின் 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இந்த சிங்கப்பூர் பங்களாவில் தங்கியிருந்து வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதா தங்கியதால் அந்த பங்களா மிகவும் பிரபலம் ஆனது. அதை அம்மா வீடு என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி என்.ஆர்.டி. நகரில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் குடியேறி உள்ளார். அங்கு தங்கியிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடத்தி வருகிறார்.



ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து தேனி நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் அம்மாவை தவிர யாரும் குடியிருந்ததில்லை. அம்மா வாழ்ந்த வீடு என்பதால் கோயிலாக பார்க்க வேண்டிய இவ்வீட்டினை தாரை வார்த்து விட்டனர்.

அம்மாவை கடுமையாக விமர்சித்த இளங்கோவன் அந்த வீட்டில் குடியேறி விட்டார். அம்மாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் சென்டிமெண்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அ.தி.மு.க. தொண்டர்கள் கலைப்படுகிறார்கள்.

அம்மாவிற்காக கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரசார வாகனம் இன்று காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது. #Jayalalithaa #EVKSElangovan
Tags:    

Similar News