உள்ளூர் செய்திகள்

சென்னை கல்லூரி மாணவியிடம் பழகி ரூ.3½ லட்சம் பணம் பறிப்பு- தெலுங்கானா என்ஜினியர் கைது

Published On 2023-09-13 10:23 GMT   |   Update On 2023-09-13 10:23 GMT
  • கேரள பெண் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை சைதன்ய ராஜின் தாயார் மருத்துவ செலவிற்கு அனுப்பியுள்ளார்.
  • மணிகண்டன் சாய் பெண்களிடம் மோசடி செய்த பணத்தை வைத்து ஊர் ஊராக சுற்றித்திரிந்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை:

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தனது திருமணத்திற்காக சுயவிவர தகவல்களை திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்த நிலையில் இணையதளத்தில் சைதன்ய ராஜ் என்ற பெயரில் மணிகண்டன் சாய் என்பவர் அறிமுகமாகி கேரள பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் சாய் தனது தாய்க்கு உடல் சரியில்லை என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கேரள பெண் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை சைதன்ய ராஜின் தாயார் மருத்துவ செலவிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் கேரள பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டன் சாயிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளார்.

இதற்கு மணிகண்டன் சாய் மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதற்கு மணிகண்டன் சாய் தன்னிடம் பணம் கேட்டால் உனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து கேரளா பெண் சென்னை சேத்துபட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பத்ம குமாரி தலைமையிலான போலீசார் மணிகண்டன் சாயை தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் தனது நண்பரின் அறையில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மணிகண்டன் சாய் தெலுங்கானாவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பி.டெக் பட்டதாரியான மணிகண்டன் சாய் பல்வேறு திருமண செயலியில் போலியான முகவரி கொடுத்து போலி கணக்கை தொடங்கி பணம் பறிக்கும் நோக்கில் 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பேசி வந்தது தெரியவந்தது. மணிகண்டன் சாய் பெண்களிடம் மோசடி செய்த பணத்தை வைத்து ஊர் ஊராக சுற்றித்திரிந்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வேறு ஏதாவது பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News