தமிழ்நாடு

சேலம் அம்மாப்பேட்டையில் ரவுடி வீட்டில் பழைய செல்லாத ரூ.1 கோடி சிக்கியது

Published On 2024-05-24 10:22 GMT   |   Update On 2024-05-24 10:22 GMT
  • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
  • பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சாபீர் (32), பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் சேலம் வீராணம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், ரவுடி சாபீரும் கஞ்சா விற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சாபீர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் எண்ணிய போது 1000 ரூபாய் நோட்டுகள் 7400-ம், 500 ரூபாய் நோட்டுகள் 5000-ம் என 99 லட்சம் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது பிரபல ரவுடியான சாபீர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறினார். மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பணத்தை மாற்றி தருமாறு கூறி தன்னிடம் கொடுத்தார். ஆனால் அதனை மாற்ற முடியாத நிலையில் பணம் கொடுத்தவர் இறந்து விட்டார்.

இதனால் அந்த பணத்தை தனது வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சாபீரை கைது செய்த போலீசார் 99 லட்சம் மதிப்பிலான அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News