தமிழ்நாடு

ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமானத்திற்கு இடையூறு- நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

Published On 2024-05-24 09:39 GMT   |   Update On 2024-05-24 09:39 GMT
  • அனைத்து உறவினர்களையும் ஒன்று சேர்த்து செய்யும் சடங்களை செய்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
  • எங்கள் கிராம மக்களுக்கு எதிராக செயல்படும் இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி, அப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வெளியூர் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஈஷாவை சுற்றியுள்ள 6 கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று ஒன்றாக மனு அளித்தனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:

தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துயல், செம்மேடு ஆகிய 6 கிராம மக்கள் சார்பாக நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம். இதில் 4 கிராமங்கள் பழங்குடி கிராமங்கள் ஆகும்.

எங்கள் கிராமங்களில் சரியான மயான வசதி இல்லாததன் காரணமாக இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்வதற்கு நாங்கள் 20 கி.மீ வரை செல்ல வேண்டி உள்ளது. இதனால், பொருளாதார ரீதியாக பல சிரமங்களை சந்தித்து வருகிறோம். அனைத்து உறவினர்களையும் ஒன்று சேர்த்து செய்யும் சடங்களை செய்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

எனவே, எங்கள் கிராமத்திற்கு அருகிலேயே நல்லதொரு மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக ஒவ்வொரு கிராம மக்களும் தனி தனியாக, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோரிடம் மனுக்கள் அளித்துள்ளோம்.

இதன் பயனாக, எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஈஷா வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவர்களுடைய செலவில், நவீன எரிவாயு மயானம் ஒன்று கட்டுப்பட்டு வரும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என எங்களுடைய கிராமங்களுக்கு பல உதவிகளை ஈஷா செய்து வருகிறது.

அதன் தொடச்சியாக, இப்போது அரசு அனுமதியுடன் நவீன எரிவாயு மயானமும் கட்டி வருகிறது. இந்த நல்ல செயலுக்கு 6 கிராம மக்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

இந்த சூழலில், சிவஞானம், காமராஜ், சுப்பிரமணியன் மற்றும் இன்னும் சில வெளியூர் நபர்கள், அமைப்புகள் ஈஷாவில் கட்டுப்பட்டு வரும் எரிவாயு மயானப் பணிகளை தடுக்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்கள் எங்கள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பொய் செய்திகளை பரப்பி ஊர் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், அந்த வெளியூர் நபர்கள் சில ஊடகங்களில் ஈஷாவிற்கு எதிராக அவதூறாக பேட்டியும் அளித்து வருகின்றனர்.

எனவே, எங்கள் கிராம மக்களுக்கு எதிராக செயல்படும் இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானப் பணிகள் எவ்வித இடையூறும் இன்றி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Tags:    

Similar News