"முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன்" - முத்தமிழ் பேரவை விருது விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்!
- எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம்
- கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர்,
"ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். விழாவின் இயக்குநர் அமிர்தம் அழைத்தால், நான் மறுக்கமுடியுமா?.
சிறுவயதில் இருந்து என் வளர்ச்சியை பார்த்தவர். என்னை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவர் அமிர்தம். தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் முத்தமிழ் பேரவையின் 51வது ஆண்டுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால், கருணாநிதி கலைஞராக விளங்கினார். அவர்பேரில் விருது வழங்கவேண்டுமென்று நான் வைத்த கோரிக்கையின் படி கடந்த ஆண்டு சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் எழுத்தில் இளைஞன், பாசப்பறவை, பொன்னன் சங்கர் என பல படங்களில் நடித்தவர் நாசர். அவர் இன்று கலைஞர் விருதை பெறுவது மிக மிக பொருத்தம் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவருக்கு எல்லாம் தகுதியும் உள்ளது. விருது பெற்றிருக்கும் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
விழாவில்
முந்தைய ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும் நாம் ஆட்சிக்கு வந்தபின் 2022ஆம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. டி.எம். சௌந்தராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி உள்ளோம். எஸ்.பி.பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தியுள்ளோம். கலைமாமணி விருதுகள் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு கலைஞர்களை போற்றக்கூடிய அரசாக திமுக உள்ளது. எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம். கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.