திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது - ஐகோர்ட்டில் வாதம்
- இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
- கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.
அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.
இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.
பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.
அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.