உள்ளூர் செய்திகள்

பழனியில் அரசு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- சிறுவன் உள்பட 5 பேர் கைது

Published On 2022-09-21 07:14 GMT   |   Update On 2022-09-21 07:14 GMT
  • இரவு நேரங்களில் சில மாணவிகளை வாலிபர்கள் அழைத்துச்சென்று அதிகாலையில் விடுவதாக வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அனுப்பப்பட்டது.
  • ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுதாராபுரம் ரோட்டில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்ளது. பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் படிக்கும் ஏழை மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி உள்ளனர்.

கடந்த சில தினங்களாக விடுதியில் தங்கி உள்ள மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர்.

இரவு நேரங்களில் சில மாணவிகளை வாலிபர்கள் அழைத்துச்சென்று அதிகாலையில் விடுவதாக வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அனுப்பப்பட்டது.

இதனைதொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி புகார் அளித்த மாணவிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு அவர்களது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து விடுதிவார்டன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். இதில் மாணவிகள் வாலிபர்களுடன் வெளியே சென்றுவந்தது உறுதியானது. இதனைதொடர்ந்து அவர்களை அழைத்துச்சென்ற கிருபாகரன், ராகுல், பரந்தாமன், 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதில் 3 பேருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரியவந்தது. அவர்கள் மாணவிகளின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இச்சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 5 பேரும் இன்று பழனி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே பணியில் மெத்தனமாக இருந்த விடுதி வார்டன் அமுதா, வாட்ச்மேன் விஜயா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகம் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News