உள்ளூர் செய்திகள்

5ஜி அலை கற்றை ஏலத்தில் ரூ.1700 லட்சம் கோடி இழப்பு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2022-08-04 09:39 GMT   |   Update On 2022-08-04 09:39 GMT
  • 3ஜி, 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஜி ஏலத்திலும் அரசின் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்கேற்கவில்லை.
  • செல்பேசி சந்தையில் பி.எஸ்.என்.எல். பங்கு 10 சதவிகிதமாக குறைந்து மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை பகிரங்கமாக ஏலம் விட்டதில் அரசுக்கு சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும் என மத்திய அமைச்சர்கள் கூறினர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு முடிந்த இந்த ஏலத்தில் மத்திய அரசுக்கு வெறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து நூற்று எழுபத்து மூன்று கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிட்டியது என மோடி அரசு அறிவித்திருப்பது நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளது.

ஏற்கனவே 3ஜி, 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஜி ஏலத்திலும் அரசின் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்கேற்கவில்லை. இதனால் செல்பேசி சந்தையில் பி.எஸ்.என்.எல். பங்கு 10 சதவிகிதமாக குறைந்து மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

முழுக்க முழுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்றன. குறிப்பாக இதுவரை டெலிகாம் சேவையில்-வணிகத்தில் ஈடுபடாத ஆனால் பிரதமர் மோடியின் உற்ற நண்பரான கௌதம் அதானியின் ஏ.டி.என்.எல். நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இன்னமும் பழமையான 2ஜி மற்றும் 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அதன் செல்பேசி சேவையை வழங்க நிர்பந்திக்கும் மோடி அரசு, தனியார் நிறுவனங்கள் 4ஜி ஸ்பெக்ட்ரம் வழியாக நவீன செல்பேசி சேவையை வழங்க பத்தாண்டு கழிந்த பிறகும் இன்றுவரை 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க மறுப்பது கண்டனத்துக்கு உரியது.

5ஜி ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1716 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News