உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்து பிரதமர் மோடி உருவ பொம்மையை கைப்பற்றிய போலீசார்.

பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற நெல்லை மாவட்ட காங்கிரசார்- 25-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2023-07-07 09:08 GMT   |   Update On 2023-07-07 09:08 GMT
  • ராகுல் காந்தி மீது பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
  • போராட்டத்தின்போது காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

நெல்லை:

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

எம்.பி. பதவி பறிப்பு

இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்ட னையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையில் போராட்டம்

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மோடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் உருவப் பொம்மைக்கு தீயிட்டு கொழுத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹரிஹரன் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். அப்போது அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

25 பேர் கைது

இதை எடுத்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன்,மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் கெங்க ராஜ்,பிவிடி. ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, ரசூல் மைதீன் நிர்வாகிகள் வெள்ள பாண்டி, சின்ன பாண்டி,குறிச்சி கிருஷ்ணன் உள்பட 25 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News