உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் பூக்கள் விலை குறைந்தது

Published On 2022-08-17 08:42 GMT   |   Update On 2022-08-17 08:42 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.
  • விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

சென்னை:

கோயம்பேடு, பூ மார்கெட்டில் கடந்த வாரம் வரை பூக்களின் விலை அதிகரித்து விற்பனையும் விறுவிறுப்பாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வரலட்சுமி நோன்பு உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்கள் முடிந்துவிட்டதால் மீண்டும் பூ விற்பனை மந்தமாகி உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.600 வரை விற்ற மல்லி இன்று ரூ.300-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல் கிலோ ரூ.300-க்கு விற்ற முல்லை ரூ.200-க்கும், கிலோ ரூ.400-க்கு விற்ற ஜாதி மல்லி ரூ.250-க்கும், கிலோ ரூ.160 வரை விற்ற சாக்லேட் ரோஜா ரூ.80-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்ற பன்னீர் ரோஜா ரூ.60-க்கும், கிலோ ரூ.250 வரை விற்ற சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது. மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் சாமந்தி பூ கிலோ ரூ.140-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து மொத்த வியாபாரி மூக்கையா கூறும்போது, நேற்றுடன் ஆடி மாதம் முடிந்துவிட்டது. மேலும் வரக்கூடிய நாட்களில் விசேஷ நாட்கள் ஏதும் இல்லை என்பதால் பூ விற்பனை கணிசமாக சரிந்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக இந்த மாத இறுதியில் பூ விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags:    

Similar News