உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

நெல்லை மாவட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்சுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

Published On 2022-08-09 09:40 GMT   |   Update On 2022-08-09 09:40 GMT
  • தனியார் நிர்வாகம் ஒன்று ஒப்பந்த முறையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை எடுத்து நிர்வகித்து வருகிறது.
  • ஊதியம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், அதனை சரி செய்ய வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது.

சிறப்புரை

மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிர்வாகிகள் சுந்தர்ராஜ், முருகன், அருள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தமிழக முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனை தனியார் நிர்வாகம் ஒன்று ஒப்பந்த முறையில் எடுத்து நிர்வகித்து வருகிறது.

நெல்லை, தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 80 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை நேரம், ஊதியம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், வாகன கொள்முதல் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் திசையன்விளை, ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரி, முன்னீர்பள்ளம், கங்கைகொண்டான் உள்ளிட்ட 4 இடங்களில் 108 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்த ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.

அங்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி மீண்டும் 108 ஆம்புலன்சுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீதபற்பநல்லூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு 6 மாதமே ஓடிய நிலையில், தற்போது அந்த ஆம்புலன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும், இதே போல் தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ள ஆட்கள் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News