உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றம் நடைபெற்றதையும், கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதையும் படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Published On 2022-07-22 09:50 GMT   |   Update On 2022-07-22 09:50 GMT
  • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.
  • வருகிற 25-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவமும், 31-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் உற்சவமும் நடைபெற இருக்கிறது.

நெல்லை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.

அதில் ஆடிப்பூரத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும்.

அதன்படி ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை காந்திமதி அம்பாள் சுவாமி கோவிலுக்கு வெளிச்சப்பரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து அதிகாலை நடை திறக்கப்பட்டு திருவனந்த வழிபாடு, கஜபூஜை, கோபூஜை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. பின்னர் அம்பாள் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆடிப்பூரத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 25-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவமும், 31-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் உற்சவமும் நடைபெற இருக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News