உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

Update: 2022-05-14 06:53 GMT
மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் ஆய்வு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளும் எவராலும் எளிதில் மறக்க முடியாத கொடுந்துயரம் ஆகும். அத்தகைய நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக சென்னையில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டாலும் மந்தமாக நடைபெறும் பணிகளால் நடப்பாண்டும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி திருப்புகழ் தலைமையிலான குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு கட்டங்களாக வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அப்பணிகளில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

கடந்த ஆண்டு பெய்த மழையில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி கே.கே.நகர் ராஜமன்னார் சாலை தான். அங்கு வாகனங்களே மூழ்கும் அளவுக்கு பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. அப்பகுதியில் ரூ.28.17 கோடியில் மழைநீர் வடிகால்களை அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று வரை பணிகள் தொடங்கப்படவில்லை.

மெட்ரோ ரெயில்பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ஒட்டுமொத்த போக்குவரத்தும் அந்த சாலையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், அங்கு உடனடியாக பணிகளை தொடங்கவும் முடியாது. பணிகளை மேற்கொள்ளாவிட்டால் மழைக்காலத்தில் அப்பகுதி மூழ்குவதை தடுக்கவும் முடியாது.

மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் ஆய்வு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

பணிகள் தாமதமாக காரணம், ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படாதது தான். மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படும் எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவில் 50 சதவீத எண்ணிக்கையிலான பணியாளர்கள் கூட ஈடுபடுத்தப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

அதிகபட்சமாக இன்னும் 4 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையாவிட்டால் சென்னை இந்த ஆண்டும் பெரும் வெள்ளத்தையும், துயரத்தையும் எதிர்கொள்ளும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பணிகளுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதையும், பருவமழைக்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News