உள்ளூர் செய்திகள்
சேலத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சூரமங்கலம் சாலையில் மழை தண்ணீர், சாக்கடை நீருடன் கலந்து பெருக்

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை

Published On 2022-04-24 08:43 GMT   |   Update On 2022-04-24 08:43 GMT
சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்டுகிறது.  அனல் பறக்கும் இந்த வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களிலும் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் ஏற்பட்டு தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

கனமழை கொட்டியது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று  இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பழைய பஸ்நிலையம்,  அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஜங்சன், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தண்ணீர் தார் ரோடு, சிமெண்ட் ரோடுகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் மழை தண்ணீர் சாக்கடை நீருடன் கலந்து சாக்கடை கால்வாயை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது.  இதைத்தவிர சில இடங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது. அதுபோல் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தடுமாறி விழுந்தனர் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவைகளில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். குறிப்பாக சூரமங்கலம் மெயின் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் சாலையில் தேங்கி நின்றது. அந்த பகுதியில் உள்ள  வீடுகளுக்குள்ளும் மற்றும் கடைகளுக்குள்ளும் புகுந்தது.  

எனவே மாநகராட்சி நிர்வாகம் வருங்காலங்களில் மழைநீர்  சாலையில் தேங்காதவாறும் வீடுகளுக்குள் புகாதவாறும் சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: சேலம் 41.4, சங்ககரி11, தம்மம்பட்டி10, ஆத்தூர் 6.8, எடப்பாடி 3.4, ஏற்காடு 1.8.
Tags:    

Similar News