உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேசியபோது எடுத்தபடம்.

பனமரத்துப்பட்டி ஏரியை ரூ.98 கோடியில் சீரமைக்க நடவடிக்கை-அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Update: 2022-04-15 10:17 GMT
பனமரத்துப்பட்டி ஏரியை ரூ.98 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சேலம்:

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ, துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர். 

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு நியமித்தகுழு பரிந்துரைத்தது அடிப்படையில்தான் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் 83 சதவீத மக்களுக்கு பாதிப்பு இல்லை. மத்திய அரசின் நிதித்துறை பரிந்துரைப்படி வரி உயர்வு அவசியமானது.

வரியை உயர்த்தாததால் கடந்த ஆண்டு ரூ.7 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை. வரி உயர்வு அவசியமானது என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். சில அரசியல் கட்சியினர் மட்டும் அரசியலுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் வளர்ச்சி திட்டத்திற்கு வரி உயர்வு அவசியமானது.

சேலம் பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூ.98 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கீடு பெற்று சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவின் மூலம் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை குறித்து பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எதையும் சொல்வதில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ளதால் அரசியலுக்காக வரி உயர்வு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அதை எதிர் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News