உள்ளூர் செய்திகள்
பாளை சிவன் கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்தபடம்.

நெல்லை கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2022-04-15 09:48 GMT   |   Update On 2022-04-15 09:48 GMT
சித்திரை திருவிழாவையொட்டி நெல்லை கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.

பாளை தெற்கு பஜாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் கடந்த 7-ந்தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றுவரும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடு, சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை  தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு பாளை சிவன் கோவிலின் 4 ரதவீதிகளிலும், தேர் செல்லும் அனைத்து பாதைகளிலும் இடையூறாக தாழ்வாக இருந்த மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இதனால் அங்குள்ள தெற்கு பஜார், காய்கறி கடை தெரு, கிருஷ்ணன் கோவில் தெருக்களில் மின்வினியோகம் தடைபட்டது. தேரோட்டம் முடிந்த பின்னர் மீண்டும் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுத்தனர்.

இதேபோல் டவுன் குறுக்குத்துறை கோவிலிலும் கடந்த 6-ந்தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி 10-ம் நாளான இன்று தேர்திருவிழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Tags:    

Similar News