உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

12 சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட தாமதம் ஏன்?- அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-02-18 02:57 GMT   |   Update On 2022-02-18 02:57 GMT
தமிழ்நாட்டில் உள்ள 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட ஏன் தாமதம் ஏற்பட்டது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன.

அந்தவகையில், 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

அவர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, “தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.92 சதவீத சதுப்பு நிலங்கள் உள்ளன, சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியும். தற்போது பள்ளிக்கரணை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழுவேலி ஆகியன சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 12 இடங்களை சதுப்பு நிலங்களாக அறிவிக்கும் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. சதுப்பு நில பாதுகாப்புக்கான ராம்சிர் சாசனத்தின் கீழ், தமிழ்நாட்டில் கோடியக்கரை மட்டும் சதுப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, சட்டவிதிகளின் கீழ் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பு வெளிடுவது குறித்து அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட ஏன் தாமதம் ஏற்பட்டது? என்பது குறித்தும் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News