உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சளி, காய்ச்சல் காரணமாக இன்று சிகிச்சை பெற வந்தவர்கள் வரிசையில் நிற்கும் காட்சி.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சளி, காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2022-01-24 10:32 GMT   |   Update On 2022-01-24 10:32 GMT
சளி, காய்ச்சலுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வருபவர்களின் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது.
நெல்லை:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தற்போது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 85 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இதில் பெரும்பாலானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 254 பேரும், தென்காசி மாவட்டத்தில் 1313 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 7 ஆயிரத்து 652 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் தற்போது சளிக்காய்ச்சல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது காலை நேரம் அதிகமாக பனிப்பொழிவு காணப்படுகிறது. 

இதன் காரணமாக காலையிலேயே வேலைக்கு செல்பவர்களுக்கு பணி பாதிப்பு காரணமாக அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.

நெல்லையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இன்று சளி, காய்ச்சல் காரணமாக வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் காலையிலேயே வந்து, நீண்ட வரிசையில் நின்று சிகிச்சைக்கான டோக்கனை பெற்று சென்றனர்.

இதுபோல தூத்துக்குடி, தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் தற்போது சளி காய்ச்சல் காரணமாக வெளி நோயாளியாக சிகிச்சை பெற கூட்டம் அதிகமாக வருகிறது. அங்கும் நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்றுச்செல்கிறார்கள்.

தனியார் ஆஸ்பத்திரியிலும் சளி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 

தினசரி 500-க்கும் மேற்பட்டவர்கள் சளி,காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதுபோல பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News