உள்ளூர் செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசு குறைந்தது

Published On 2022-01-08 04:48 GMT   |   Update On 2022-01-08 04:48 GMT
தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததுதான் முட்டை விலை சரிவுக்கு காரணம் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.80 ஆக இருந்த முட்டை விலை, 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 4.90, பர்வாலா 4.70, பெங்களூர் 4.80, டெல்லி 5.05, ஹைதராபாத் 4.40, மும்பை 5.05, மைசூர் 4.75, விஜயவாடா 4.70, ஹொஸ்பேட் 4.40, கொல்கத்தா 5.40.

கடந்த 6-ந் தேதி ரூ.5.05 ஆக இருந்த முட்டை விலை 25 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.80 ஆனது. தற்போது 2 நாட்களில் மேலும் 20 பைசா குறைந்து ரூ.4.60 ஆனது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ.45 பைசா விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததுதான் முட்டை விலை சரிவுக்கு காரணம். ஊரடங்கால் முட்டை தேக்கம் அடையும் என்ற பயத்தில் பண்ணையாளர்கள், விரைவாக முட்டைகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு, என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் விலையை விட, குறைந்த விலைக்கு முட்டை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் என்றார்.
Tags:    

Similar News