உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க முக கவசமே பாதுகாப்பு கேடயம் - மு.க.ஸ்டாலின்

Published On 2022-01-03 05:29 GMT   |   Update On 2022-01-03 06:51 GMT
ஒமைக்ரான் வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி.

ஒமைக்ரான் வைரஸ் தற்போது மிரட்டத் தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். முந்தைய வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தாக்கம் சற்றுக் குறைவு.

நோயின் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக முக கவசம் விளங்குகிறது. எனவே, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொது இடத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சத்தியை கொடுக்கும் வீரியமுள்ள தடுப்பூசியை செலுத்தி உள்ளோம். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன். தொற்றில் இருந்து விடுபட்டுள்ள மாநிலத்திலும் தமிழகம் முதலிடம் பெறவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News