உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் 6 நாளில் 4 மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று

Published On 2022-01-03 04:36 GMT   |   Update On 2022-01-03 05:25 GMT
பொது இடங்களிலும், வணிக வளாகங்களிலும் திரளும் மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலேயே சுற்றிவருவது வழக்கமாக இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி இருந்தது. சென்னையிலும் அப்போது நோய் தொற்று அதிகரித்து காணப்பட்டது.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு டெல்டா வகை கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டு முடங்கியவர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.

இந்த கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது.

அந்த வகையில் டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 700-க்கும் கீழ் சென்றது. சென்னையில் தினசரி பாதிப்பு 150-க்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.

இப்படி கொரோனா தொற்று குறைந்து மக்கள் அதனை முழுமையாக மறந்து இருந்த நேரத்தில் தான் ஒமைக்ரான் பரவல் தொடங்கியது.

இதையடுத்து கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் கடந்த மாதம் இறுதியில் இருந்தே மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 27-ந்தேதி அன்று சென்னையில் 172 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தமிழகம் முழுவதும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதன் பிறகு கடந்த 6 நாட்களில் கொரோனாவின் வேகம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்துள்ளது. டிசம்பர் 28-ந்தேதியன்று சென்னையில் 194 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

அன்றைய தினம் தமிழகம் முழுவதும் 612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்துகொண்டே சென்றுள்ளது. அந்த வகையில் சென்னையில் 29-ந் தேதியன்று 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அது 31-ந் தேதி 589 ஆக அதிகரித்தது.

நேற்று முன்தினம் புத்தாண்டு அன்று சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 682 ஆக இருந்தது. தமிழகம் முழுவதும் அன்று 1,489 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்படி கடந்த 27-ந்தேதியில் இருந்து நேற்று (2-ந்தேதி) வரையில் சென்னையில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.

மாநில அளவிலான தினசரி பாதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையிலேயே 50 சதவீத பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான பயம் துளியும் இல்லாமலேயே உள்ளது.

கடந்த 2 நாட்களாக புத்தாண்டையொட்டி சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் கூடிய கூட்டமே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

மெரினா கடற்கரைக்கு யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்த போதிலும் மக்கள் தடையை மீறி அங்கு திரண்டதை காண முடிந்தது.

இதேபோன்று பொது இடங்களிலும், வணிக வளாகங்களிலும் திரளும் மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலேயே சுற்றிவருவதும் வழக்கமாக இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து சென்னை போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


Tags:    

Similar News