உள்ளூர் செய்திகள்
கைது

தொண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2021-12-30 09:21 GMT   |   Update On 2021-12-30 09:21 GMT
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணத்தில் மீன் மார்க்கெட் அருகில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் இதை உடைக்க முயற்சி செய்தது அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சுதர்சன், தலைமை காவலர்கள் போஸ், முருகன், கணேசன், புருசோத்தமன், துரை உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை 6 மணி நேரத்துக்கு மேலாக ஆய்வு செய்தனர். அதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த ஹைதர் அலி மகன் ஷேக் தாவுத் (வயது 26) என்பவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. அவரை பல இடங்களில் தேடினர். தொண்டி அருகே கடலோர கிராமமான பாசிப்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை கைது செய்த எஸ்.பி.பட்டிணம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News