உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி

அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி இன்று முதல் தொடக்கம்

Published On 2021-12-21 07:32 GMT   |   Update On 2021-12-21 10:12 GMT
யோகா பயிற்சியின் மூலம் பெண்களின் பிரசவ வலி அவர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும் என்று அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் தீபா கூறினார்.
சென்னை:

கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்காக யோகா பயிற்சி அளிப்பதை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல விடுதிகளில் இந்த பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சியாளர்கள் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் தீபாவிடம் கேட்டபோது, “நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால் வீடுகளில் அன்றாடம் செய்யும் துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது, மாவு அரைப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் சரியான உடற்பயிற்சி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் ஆபரேசன் மூலம் பிரசவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட நேரிடுகிறது” என்று கூறினார்.



கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சிகள் பற்றி அவர் கூறியதாவது:-

கர்ப்பிணிகள் கர்ப்பம் அடைந்தது தெரிந்துமே யோகா பயிற்சி பெறலாம். இதன்மூலம் கர்ப்பகால பிரச்சினைகள் ஏற்படாது. பல பெண்கள் பிரசவ வேதனையை நினைத்து பயப்படுவதும் உண்டு. யோகா பயிற்சியின் மூலம் அந்த வலியும் அவர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும்.

உதாரணமாக அந்த காலத்தில் ஆட்டுகல்லில் மாவு அரைத்ததால் கைகளுக்கும், உடலுக்கும் பயிற்சி கிடைத்தது. இப்போது அதையே யோகாவில் ‘ஜக்கி சாலனா’ யோகாவாக சொல்லித் தருகிறோம்.

படகு செலுத்துதல், மரம் வெட்டுதுல் மாதிரியான பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள் பேறு காலத்தில் ரத்தப்போக்கு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்கும்.

அதேபோல் இப்போது பெரும்பாலும் வெஸ்டர்ன் கழிவறைகளையே பயன்படுத்துகிறோம். கால் மூட்டு, இடுப்பு பகுதி தசைகளுக்கு பயிற்சி இல்லாமல் போய் விடுகிறது. அதற்கும் யோகாவில் பயிற்சி உள்ளது.

சுருக்கமாக சொன்னால் அந்த காலத்தில் இயற்கையாகவே செய்த வேலைகளின் மூலம் கிடைத்த பயிற்சியை இப்போது யோகா மூலம் கொடுக்கிறோம்.

கர்ப்பிணிகள் நலன்காக்க அரசு இந்த திட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது. இது வருங்காலங்களில் சுகப்பிரசவங்கள் அதிக அளவில் நடப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு டாக்டர் தீபா கூறினார்.


Tags:    

Similar News