உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர்கள்

Published On 2021-12-16 10:02 GMT   |   Update On 2021-12-16 10:02 GMT
சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது வெள்ளை சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் போன் பேசியபடி அவரது வாகனத்தை நோக்கி வருவது பதிவாகி இருந்தது.
திருப்பூர்

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை திருமலை நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவர் பைபர் லிங்க் எனும் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை தனது பணிக்காக பொருட்களை எடுத்துவர மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள அலுவலக நண்பர்கள் அறைக்கு சென்றுள்ளார். 

பொருட்களை எடுத்துக் கொண்டு 5 நிமிடத்தில் வெளியே வந்து பார்த்த போது தனது பஜாஜ் சி.டி. 100 இருசக்கர வாகனம் காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அருகே தேடிப்பார்த்தும் வாகனம் கிடைக்காததால் அப்பகுதியில் இருந்த கடைகளின் சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது  வெள்ளை சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் போன் பேசியபடி அவரது வாகனத்தை நோக்கி வருவதும் பின்னர் கருப்பு சட்டை அணிந்த மற்றொரு நபர் வாகனத்தை  சரி செய்வது போல நின்று கொண்டும் உள்ளனர்.

பின்னர் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதயகுமாரின் வாகனத்தை வெளியே தள்ளி வந்து திருடிக்கொண்டு செல்வதும் பதிவாகி உள்ளது. 

இதுதொடர்பாக அவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க  சென்றார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆதாரமாக கொடுத்த பின்னரும் காவல் நிலையத்தில் புகாரை பெறாமல் கடந்த 3 நாட்களாக உதயகுமாரை அலைகழிப்பதாகவும், புகாரை பெற்று வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் உதயகுமார் வேதனையுடன் தெரிவித்தார். 

ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
Tags:    

Similar News