உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாற்றுச்சான்றிதழில் கல்வி கட்டண பாக்கி-தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரிக்கை

Published On 2021-12-06 07:39 GMT   |   Update On 2021-12-06 07:39 GMT
கல்விக் கட்டணம் நிலுவை காரணமாக தனியார் பள்ளிகள் மாற்று சான்றிதழ் கொடுக்க மறுப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருப்பூர்:

பள்ளி மாற்றுச்சான்றிதழில் கல்விக்கட்டணம் பாக்கி உள்ளது என குறிப்பிடலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பேரிடர் பாதிப்புக்கு ஆளான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க இயலாத காரணத்தால் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

கல்விக்கட்டணம் நிலுவை காரணமாக தனியார் பள்ளிகள் இப்பெற்றோர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுக்க மறுப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதன் காரணமாக மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது. 

இந்நிலையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் கட்டண பாக்கி உள்ளது எனக்குறிப்பிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பள்ளிகள் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் ’கட்டணப் பாக்கி உள்ளது’ என்று குறிப்பிட்டால் மாணவர்கள் மனத் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும். அரசுக்கு வரி செலுத்தும் மக்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கட்டணமின்றி கிடைக்கச் செய்வது அரசமைப்புக் கடமைகளில் ஒன்றாகும். 

மேலும் கட்டணம் செலுத்த முடியாத பிள்ளைகளின் கல்வி சான்றிதழில் கட்டண பாக்கி உள்ளது என்று குறிப்பிட அனுமதிப்பது மனித நேயமற்றது. 

எனவே தனியார் பள்ளிகள் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி உள்ளது எனக் குறிப்பிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News