செய்திகள்
ராமதாஸ்

முல்லை பெரியாரில் புதிய அணை வேண்டாம்: கேரள அரசுடன் பேசக்கூடாது - ராமதாஸ்

Published On 2021-11-10 08:07 GMT   |   Update On 2021-11-10 11:07 GMT
பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

முல்லைப்பெரியாறு சிக்கலைப் பேசித் தீர்க்கும்படி 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞரும், கேரள முதல்-அமைச்சர் அச்சு தானந்தனும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் அந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து டிசம்பர் 18-ம் தேதி இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களான துரைமுருகனும், பிரேமச்சந்திரனும் பேசினார்கள். இரு கட்ட பேச்சுகளும் தோல்வி அடைந்தன. இந்தப்பேச்சுகளை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு வழக்கு விசாரணையை கேரள அரசு 7 ஆண்டுகள் தாமதப்படுத்தியது.

அதேபோல், இப்போதும் புதிய அணை குறித்து தமிழகத்தை பேச்சுக்கு அழைப்பதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதங்களுக்கு புத்துயிரூட்டவும் கேரளம் துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்துவிடக் கூடாது.


எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட எந்த சிக்கல் குறித்தும் கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...முல்லைப் பெரியாறு விவகாரம்: நாம் தமிழர் கட்சி 14-ந் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு

Tags:    

Similar News