செய்திகள்
கேஎஸ் அழகிரி

மக்களை பாதிக்கும் வரிவிதிப்புகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - கே.எஸ்.அழகிரி

Published On 2021-08-21 21:55 GMT   |   Update On 2021-08-21 21:55 GMT
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படாததற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விற்கப்பட்ட ஆயில் பத்திரங்கள்தான் காரணம் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கலால் வரியை உயர்த்தியதன் மூலம் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் மீது கடும் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த நடவடிக்கைகளைப் பார்க்கிறபோது பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News