செய்திகள்
கே.எஸ்.அழகிரி

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-06-30 08:08 GMT   |   Update On 2021-06-30 08:08 GMT
மோடி அரசின் அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறான கொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24-ந்தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, மோடி அரசின் அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமை என்ன என்பது குறித்த தரவுகளோ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளோ மத்திய அரசிடம் இல்லை. இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதில் 40 சதவீத நிறுவனங்கள் நிதி ஆதாரம் இன்றி இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் உலக வங்கி அறிவித்த பிறகு, 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவித்திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே நிதி தொகுப்பை பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிட பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி, மூழ்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களையும், இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கி விட்டார். வழக்கம் போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகாமல், தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Tags:    

Similar News