செய்திகள்
மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்: மா.சுப்பிரமணியன்

Published On 2021-05-14 02:04 GMT   |   Update On 2021-05-14 02:04 GMT
எந்த தனியார் ஆஸ்பத்திரியாக இருந்தாலும் சரி மனிதாபிமானம் இல்லாமல், இப்பேரிடர் காலத்தில் சம்பாதிக்கும் காலமாக பார்க்காமல் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
சென்னை :

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முழு ஊரடங்கு எப்போது இருந்து தீவிரமாக்கப்படும்?

பதில்:- அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இது நடைமுறைப்படுத்தப்படும்.

கேள்வி:- கொரோனா முற்றிய நிலையில் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் அனுப்பி வைக்கின்றன என குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்:- சில தனியார் ஆஸ்பத்திரிகள் அதிக கட்டணத்தை வாங்கிக்கொண்டு கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வருவதாக புகார்கள் எழுகிறது. சில தனியார் ஆஸ்பத்திரிகள் மனசாட்சி இல்லாமல் இதுபோல நடந்துகொள்கின்றன. ஆக்சிஜன் வசதி இல்லாத சிறிய அளவிலான தனியார் ஆஸ்பத்திரிகள் இதுபோன்ற வேலைகளை செய்கிறார்கள். அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறோம்.

நோயாளிகளை அனுமதிக்கும்போதே இவர்களை காப்பாற்ற முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தால்தான் சிகிச்சை கொடுக்க தொடங்கவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்துவிட்டு அடுத்தக்கட்ட பிரச்சினைகளை அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது தவறான விஷயமாகும். எந்த தனியார் ஆஸ்பத்திரியாக இருந்தாலும் சரி மனிதாபிமானம் இல்லாமல், இப்பேரிடர் காலத்தில் சம்பாதிக்கும் காலமாக பார்க்காமல் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
Tags:    

Similar News