செய்திகள்
முக ஸ்டாலின்

சட்டமன்ற அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம்- மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

Published On 2021-05-13 02:59 GMT   |   Update On 2021-05-13 02:59 GMT
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக குழுக்களையும் அரசு உருவாக்கியுள்ளது.

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே, கொரோனா தடுப்பிற்காக பல்வேறு கருத்துகளை அப்போதிருந்த அரசிடம் வலியுறுத்தி வந்தார். அதில் ஒன்றுதான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு உடனே கூட்ட வேண்டும் என்பதாகும். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்ததும் அனைத்துக் கட்சி கூட்டம் அவர் தலைமையில் கூட இருக்கிறது.



இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க 13-ந்தேதியன்று மாலை 5 மணியளவில், தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News