செய்திகள்
விபத்துக்குள்ளான வாகனம்

மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

Published On 2021-02-15 02:15 GMT   |   Update On 2021-02-15 02:15 GMT
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்த மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி:

சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 13 பேர் நேற்று முன்தினம் சுற்றுலா வேனில் கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு, சக ஊழியரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் கொடைக்கானலில் இருந்து சிவகாசிக்கு புறப்பட்டனர். அந்த வேனை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கனகராஜன் என்பவர் ஓட்டினார். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்த டம்டம் பாறை அருகே அந்த வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பாறையில் மோதி, மலைப்பாதையின் தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மென்பொருள் நிறுவன ஊழியர்களான சேலத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 23), மதன்குமார் (25), நெல்லையை சேர்ந்த ஆல்பர்ட் செல்வின் (25), தஞ்சாவூர் மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (32), ஆயிஷாபீவி (26), சென்னையை சேர்ந்த கேசவன் (25), மதுரையை சேர்ந்த சுந்தரமூர்த்தி (30), டிரைவர் கனகராஜன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி தவித்த அனைவரையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News