செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி- அமைச்சர் பேட்டி

Published On 2021-01-03 06:48 GMT   |   Update On 2021-01-03 06:48 GMT
தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை:

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மற்ற தடுப்பூசி பணிகள் போல் இல்லாமல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் மேற் கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கோவை உள்பட 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் 25 பேர் என 425 பேருக்கு தடுப்பூசி ஒத்திகை நடந்தது. பரிசோதனை, தடுப்பூசி வழங்கல், அரைமணி நேரம் கண்காணிப்பு என்ற முறையில் 3 கட்டங்களாக தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பூசி போடுவதற்காக மாநிலத்தில் 21 ஆயிரத்து 200 தலைமை செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 47 ஆயிரத்து 200 தடுப்பூசி வழங்கும் மையங்கள் அமைக்கப்படும். 2.5 கோடி தடுப்பூசிகளை பாதுகாக்கும் குளிர்சாத அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், அடுத்தடுத்த கட்டங்களில் முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் பாதிப் புள்ளவர்கள் என்று தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். முதல்கட்டமாக தமிழகத்தில் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் விரைவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளது. உருமாறிய கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News