தமிழ்நாடு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2024-05-08 04:00 GMT   |   Update On 2024-05-08 04:00 GMT
  • திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை திடீரென பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது.
  • வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கோடை மழை பெய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பகலில் வெளியே வர சிரமப்பட்டனர். பலர் குடை பிடித்தப்படி வெளியே சென்று வந்தனர். இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை வானம் இருண்டு காணப்பட்டது. காலை 6.41 மணி அளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 8 மணிக்கு மேல் நீடித்தது. இதனால் சாலைகளில் இருபுறமும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று காலை 6.30 மணியிலிருந்து 7.15 மணிவரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை திடீரென பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இந்த மழை திண்டிவனம், பட்டணம், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாக்கம், சாரம், ஒலக்கூர் உள்ளிட்ட திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து இடங்களிலும் மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் கோண்டூர், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. இந்த மழையானது சில மணித்துளிகளில் கனமழையாக மாறியது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் விண்ணை பிளக்கும் வகையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது.

வடலூர் மற்றும் கருங்குழி, கொளக்குடி, மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 7.30 மணிஅளவில் வானம் மந்தாரமாக இருந்தது. தொடர்ந்து 20 நிமிடம் வரை மழை பெய்தது.

புவனகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென்று வானம் மேகமூட்டம் காணப்பட்டது. பின்னர் மிதமான மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, களமருதூர், திருநாவலூர், செங்குறிச்சி, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

திருக்கோவிலூர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் லேசான இடியுடன் தூறல் மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு இந்த தூறல் மழை தொடர்ந்து கனமழையாக பெய்ய ஆரம்பித்தது.

வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கோடை மழை பெய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News