செய்திகள்
கைது

நடப்பு ஆண்டில் 111 பேர் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2020-12-01 10:28 GMT   |   Update On 2020-12-01 10:28 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில், இதுவரை 111 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண்கள், 7 பெண்கள், 2 திருநங்கைகள் ஆக மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி நியமன ஆணைகளை வழங்கி, அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் திருநங்கைகளுக்கு உயர் அதிகாரிகளின் உரிய ஒப்புதல் பெற்று, பின்னர் ஆணை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன், ஊர்க்காவல் படை கமாண்டர் பாலமுருகன், துணை கமாண்டர் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு நாளை (அதாவது இன்று) முதல் 45 நாட்கள் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்த பிறகு மாதம் 5 நாட்கள் பணி வழங்கப்படும். மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். போதை பொருட்கள் கடத்தியவர்கள், பாலியல் வழக்குகளில் ஈடுபட்டவர்கள், கொலை, கொலை முயற்சியில் ஈடுபடவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ஏற்கனவே தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News