செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் மீது வழக்கு

Published On 2020-10-28 07:36 GMT   |   Update On 2020-10-28 07:36 GMT
கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை:

கோவையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. சுவரொட்டியை கிழித்த தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 144 தடை உத்தரவை மீறி அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்துதல், கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் செயல்பட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., பையா கவுண்டர், சேனா திபதி, சி.ஆர். ராமச்சந்திரன், சண்முக சுந்தரம் எம்.பி., உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது நீட் தேர்வு எழுதும் கிராமபுற மாணவர்களிடம் மாநில அரசுக்கு எதிராக பொது அமைதியை குலைக்கும் எண்ணத்திலும், விளைவை தூண்டும் விதத்தில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ.,மற்றும் பையா கவுண்டர், சேனா திபதி, சி.ஆர். ராமச்சந்திரன், தென்றல் செல்வ ராஜ், சண்முக சுந்தரம் எம்.பி., கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News