செய்திகள்
கைது

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.40 ஆயிரம் கொள்ளை - 4 பேர் கைது

Published On 2020-10-21 00:57 GMT   |   Update On 2020-10-21 00:57 GMT
வந்தவாசி அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வாச்சனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 48) என்பவர் இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேகர் டாஸ்மாக் கடையில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் 8 பேர் வந்தனர். அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி சேகரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால் கத்தியால் அவரது தலையில் வெட்டினர். பின்னர் கடையில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச்சென்று விட்டனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 8 மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வந்தவாசி குளத்து மேட்டு பகுதியில் சாதிக்பாஷா என்பவரின் செல்போனையும், எஸ்.ஆர்.ஜ. கல்லூரி அருகில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை மிரட்டியும் பணம் பறித்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த மேல்மா கூட்டு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்தது, செல்போன் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதனைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரியை சேர்ந்த அகமதுகலிமுல்லா, முஜாமுதீன், மணிகண்டன், மறைமலைநகரை சேர்ந்த மாரி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News