செய்திகள்
புகார்

படிப்பை பாதியில் நிறுத்திய கல்லூரி மாணவரின் டி.சி.க்கு ரூ.8 லட்சம் நிர்வாகம் கேட்டதாக புகார்

Published On 2020-10-06 07:25 GMT   |   Update On 2020-10-06 07:25 GMT
மணச்சநல்லூர் அருகே படிப்பை பாதியில் நிறுத்திய கல்லூரி மாணவருக்கு டி.சி. வழங்க நிர்வாக ரூ. 8 லட்சம் கேட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த எம்.ஆர்.பாளையம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 19) என்ற மாணவன் கடந்த ஆண்டு பி.எஸ்.சி. வேளாண்மை பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதையடுத்து முதலாம் ஆண்டுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலுத்தி இருந்தார்.

நடப்பு ஆண்டு கல்வி கட்டணத்துக்கு உதவித் தொகை (ஸ்கார்ஷிப்) ஏற்பாடு செய்து தரப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இந்த ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டவேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அறிந்த மாணவர் சூர்யபிரகாஷின் பெற்றோர் மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் புரட்ட முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பெற்றோரின் சிரமத்தை தவிர்க்க மாணவன் தனது படிப்பை பாதியில் நிறுத்த முடிவு செய்து டி.சி. மற்றும் இதர கல்வி சான்றிதழ்களை கேட்டார்.

அப்போது கல்லூரி நிர்வாகத்தினர் டி.சி. வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யபிரகாஷ் இதுபற்றி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது, மாணவனின் குற்றசாட்டுகளை மறுத்தனர். நாங்கள் ரூ.8 லட்சம் கேட்கவில்லை. 3-வது செமஸ்டர் கல்வி கட்டணம் ரூ.1 லட்சம் மட்டுமே செலுத்தும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News