தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

Published On 2024-05-26 07:57 GMT   |   Update On 2024-05-26 07:57 GMT
  • முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு.
  • கோள அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாலைவனமாகும்

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"தென் தமிழக மக்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திற்கு கேரள அரசு கருத்துரு அனுப்பியிருப்பதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை முற்றிலும் தடுக்கும் முயற்சியாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையினை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக கேரள மாநில எல்லைக்குள் புதிய அணை கட்டிக் கொள்வதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டினை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வு வரம்புகளை நிர்ணயம் செய்யுமாறு கேரள அரசு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தை கேட்டுக் கொண்டிருப்பதாகவும், இதன் அடிப்படையில் கேரள அரசின் கருத்துரு சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீடுக் குழுவிற்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையில், இந்தக் கருத்துரு வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவினால் 28-05-2024 அன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும்

என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2014 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், பத்து ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அங்குள்ள மரங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ மறுத்து வரும் கேரள அரசு, தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் பழைய அணையை இடிக்கவும், புதிய அணையை கட்டவும் மத்திய அரசை அணுகியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

கோள அரசின் இதுபோன்ற தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கை என்பது முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயலாகும். கேரள அரசின் தமிழகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை ஜனவரி மாதமே தி.மு.க. அரசுக்கு தெரிய வந்தும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற செயலை செய்துவிட்டு, தற்போது மத்திய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதுவது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும். இந்தக் கடிதத்தை ஜனவரி மாதமே மத்திய அரசுக்கு எழுதியிருந்தால், சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீடுக் குழுவின் பரிசீலனைக்கே இந்தப் பிரச்சனை சென்றிருக்காது. தி.மு.க. அரசின் அரசியல் ஆதாயம் காரணமாகத்தான் இந்தப் பிரச்சனை சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீடுக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

'வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்' என்ற பழமொழிக்கேற்ப, ஆபத்து வரும் முன்பே அதைத் தடுத்த நிறுத்த தேவையான நடவடிக்கைகளை இனிமேலாவது உடனடியாக எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News