செய்திகள்
மணிகண்டன் எம்எல்ஏ

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் எனது இரண்டு கண்கள்- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேட்டி

Published On 2020-09-30 05:47 GMT   |   Update On 2020-09-30 05:47 GMT
தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேருமே எனது இரண்டு கண்களாக நினைத்து மக்கள் பணியாற்றி வருகிறேன் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராமநாதபுரம்:

தமிழக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மருத்துவ அணி துணைச் செயலாளரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் மணிகண்டன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசி வந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அளவிலும் அ.தி.மு.க. கட்சியினர் மத்தியில் இந்த சந்திப்பு குறித்து பரவலாக பேசப்பட்டது. இது குறித்து டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ., மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

சென்னை சென்றால் தொகுதி மக்களின் கோரிக்கைகளை முன் வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திப்பது எனது வழக்கம். அந்த முறையில் தான் பன்னீர் செல்வத்தை சந்தித்தேன்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன் வைத்தேன். மற்றபடி இருவருமே எனது இரண்டு கண்கள். கட்சியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.

சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு.

இந்த சந்திப்பால் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவாளர்கள் என பேசப்படுவது ஏற்புடையது அல்ல. தேர்தலுக்கான கட்சிப் பணிகளை தொடங்குவது, வாக்காளர்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் விளக்குவது இது தான் எங்களது தலையாய கடமை.

இந்த நேரத்தில் குறிப்பிட்டவர்களின் பெயர்களை கூறி நீங்கள் யார் அணி என கேட்பது ஏற்கக்கூடியது அல்ல. இரண்டு பேருமே எனது இரண்டு கண்களாக கருதி கட்சிப் பணியுடன், மக்கள் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News